என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிராம மக்கள் தவிப்பு"
சென்னை:
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை கடந்த வாரம் சூறையாடிய கஜா புயல் பாதிப்பு துயரம் இன்னமும் நீங்கவில்லை.
வேதாரண்யம்- நாகப்பட்டினம் இடையே கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கஜா புயல் கரையை கடந்து சென்ற பிறகு புயலால் ஏற்பட்ட பின்விளைவுகளை தேசிய பேரிடர் மேலாண்மை குழு சமாளித்து விட்டதாக முதலில் கருதப்பட்டது.
ஆனால் மறுநாள் சனிக்கிழமை முதல் கஜா புயல் பாதிப்பு விவரங்கள் மெல்ல மெல்ல தெரிய வந்தன. வேதாரண்யம் மட்டுமே துண்டிக்கப்பட்டதாக தமிழக மக்கள் நினைத்து இருந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் கஜா புயல் நடத்திய கோர தாண்டவம் தெரிய வந்தது.
குறிப்பாக திருத்துறைப்பூண்டி, பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்பட பல ஊர்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருப்பது வெளிஉலகத்துக்கு தெரிய வந்தது. அதன்பிறகுதான் இந்த 4 மாவட்டங்களிலும் குக்கிராம மக்களும் மிக கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கிராம மக்களின் வாழ்வதாரங்களை கஜா புயல் அழித்து சென்று இருக்கும் வேதனைகளும் வெளிப்பட்டன. இதன் மூலம் கஜா புயல் சேத விவரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கஜா புயலால் வீடுகள், பயிர்கள், மரங்கள், கால்நடைகள், மின்சார கம்பங்கள் என அனைத்து தரப்பிலும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புகளை மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. நேற்று வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 1 லட்சத்து 17 ஆயிரத்து 624 வீடுகள் சேதம் அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
1 லட்சத்து 70 ஆயிரத்து 54 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. 735 கால்நடைகள் பலியாகி உள்ளன. 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு பயிர்கள் நாசமாகி உள்ளன.
கஜா புயல் தாக்குவதற்கு முன்பே சுமார் 60 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு தமிழக அரசு இடமாற்றம் செய்து இருந்தது. கஜா புயல் தாக்கிய பிறகு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் லட்சக்கணக்கானவர்கள் வீடுகள் சேதம் அடைந்து பரிதவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தற்போது சுமார் 500 முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு சுமார் 2½ லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும்ஒரு குடும்பத்துக்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை, ஒரு லிட்டர் மண்ணெய் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து தீவிரமாக செய்து வருகிறார்கள். இந்த நிவாரணப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக கூடுதலாக 11 அமைச்சர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.
மின் விநியோகத்தை சீரமைப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது, தேவைக்கு ஏற்ப உணவு மற்றும் உணவு பொருட்களை வினியோகம் செய்வது, சுகாதாரத்துக்காக மருந்து, மாத்திரைகளை வழங்குவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.
இதனால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் முழு வீச்சில் அரசு அதிகாரிகளின் பணிகள் நடந்து வருகிறது.
4 மாவட்டங்களிலும் சுமார் 5 ஆயிரம் மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. 3,559 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் வயர்கள் அறுந்து விழுந்து நாசமாகி விட்டன. அந்த பகுதிகளில் புதிய மின் கம்பங்களை நட்டு மின் வயர்களை இணைக்கும் பணிகளில் சுமார் 13 ஆயிரம் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இன்று வரை சுமார் 50 சதவீத மின் வினியோக சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளன. திருவாரூர் நகரில் 90 சதவீத இடங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது. கிராமங்களுக்கு மின் உபகரணங்களை கொண்டு செல்லும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மின் வினியோகம் மற்றும் சுகாதாரத்துக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் கூடுதல் பணியாட்களை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆந்திராவில் இருந்து 1000 பேர் வந்துள்ளனர். இவர்கள் ஒத்துழைப்புடன் இன்னும் 2 நாட்களில் மின் வினியோகம் முழுமையாக சீரடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப் பகுதிகளில் அதிகளவு மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் தற்காலிகமாக ஜெனரேட்டர் மூலம் சில கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்து வருகிறார்கள். மின் கம்பிகளை கிராமத்துக்குள் இழுத்து செல்வதில் இடையூறு நிலவுவதால் கிராமங்களில் மின் வினியோகம் சீராக கூடுதலாக சில நாட்கள் தேவைப்படும் என்று தெரிகிறது.
மின்சாரம் இல்லாத நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் கடும் பாதிப்பு நிலவுகிறது. கடந்த 2 நாட்களாக கைவசம் இருந்த பொருட்களை வைத்து பொதுமக்கள் சமாளித்து விட்டனர். இன்று பல கிராமங்களில் சுத்தமான குடிநீர், உணவு கிடைப்பதில் சவாலான நிலை காணப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு கிராமங்களுக்கு உணவு பொருட்களை வினியோகம் செய்யும் பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விடும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
கஜா புயல் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 150 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்லும் பகுதிகளில் மரங்கள் அகற்றப்படாததாலும், மின் கம்பங்களை சீரமைக்காததாலும், நிவாரண பணிகளுக்கு அதிகாரிகளால் செல்ல முடியவில்லை.
அங்குள்ள மக்கள் உணவு கிடைக்காமலும், குடிநீர் இல்லாமலும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
நாகை மாவட்டத்தில் அக்கரைபேட்டை, விழுந்த மாவடி, பண்ணைச்சேரி, வேதாரண்யம், வெள்ளப் பள்ளம், தலைஞாயிறு, ஆறு காட்டுத்துறை, கோடியக்கரை மற்றும் அதை சுற்றியுள்ள 40 கிராமங்களில் மக்கள் உணவுக்காக தவிக்கிறார்கள்.
கீழ்வேளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 10 கிராமங்களில் உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, அதிராம் பட்டிணம், பேராவூரணி, ஒரத்தநாடு, திருவோணம் உள்ளிட்ட 40 கிராமங்களை சேர்ந்த மக்கள் உணவு, குடிநீருக்காக ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, வடுவூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட 60 கிராம மக்கள் உணவு, குடிநீர் இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள்.
இந்த பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாததால் அரசு அதிகாரிகளால் நிவாரணம் வழங்க செல்ல முடியவில்லை. அங்குள்ள மக்கள் நிவாரண முகாம்களை தேடி வர வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரண முகாம்களை தேடி பொது மக்களால் செல்ல முடியவில்லை.
அந்த கிராமங்களில் சில தன்னார்வலர்கள் மட்டும் உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு முழுமையான நிவாரண உதவிகளை அவர்களால் வழங்க முடியவில்லை. மின்சப்ளையும் வழங்கப்படாததால் இரவு நேரங்களில் கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. #Gajastorm #Storm
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்